loader
Back to outreach Homepage

பூவா பூத்து காய்ச்ச கத்திரி: நஞ்சில்லா நிலத்தின் நிகர லாபம் 3 லட்சம்!

Field Stories
22 September, 2020
5:27 PM

“ஐம்பது வருஷமா விவசாயம் பண்றேன். ஆனால், இந்த ரெண்டு வருஷமாத்தான் நானும் ஒரு விவசாயின்னு நெஞ்ச நிமித்தி சொல்ல முடியுது. லாபமா விவசாயம் பண்ண முடியுங்கற நம்பிக்கையே இந்த இரண்டு வருஷமாத்தான் வந்துருக்குங்க” எனக்கூறும் குமாரசாமிக்கு விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஐந்து தலைமுறையாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இவருக்கு நிலம்தான் அவரது குலசாமி. இத்தனை வருஷ விவசாயத்துல இந்த இரண்டு வருஷம்தான் விவசாயின்னு நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும் என்று இவர் சொல்வதன் பின்னணி என்ன என்பதற்கு அவரே பதிலளிக்கிறார்.

IAM_Blog_Image_2

19 வயசுல கலப்பை பிடிச்ச கை

“நான் திருப்பூர் மாவட்டத்தின் பத்தாம்பாளையத்தில் இருக்கேன். என்னோட 19 வயசுல அப்பாரு இறந்துட்டாருங்க. அப்ப கலப்பை பிடிச்ச கை, என்னோட கூடப்பிறந்த பொறப்புகளுக்கு கல்யாணம் செஞ்சது, என்னோட பொண்ணுங்களுக்கு நிலத்தை வித்து கட்டி கொடுத்ததுன்னு, என்னோட நல்லது, கெட்டது எல்லாமே இந்த நிலமாகவே மாறிடுச்சுங்க.

வானம் பார்த்த பூமிதான் நம்ம பூமி… மழையில்லைன்னா விவசாயம் இல்லை. மழை இல்லாத அந்த வருஷம் மானாவாரி சாகுபடிதான். ஆனால், மழை பெஞ்ச வருஷம் இரண்டு போகம் விளையும். லாபம் பார்க்கவும் முடியும். 48 வருஷமா இந்த மண்ணுல பூச்சி மருந்து தெளிச்சு, ரசாயன உரம் போட்டுத்தாங்க விவசாயம் பண்ணியிருக்கேன். அதுல நிலமே இறுகிப் போயிருச்சு. வேற வழியில்லாம தென்னைக்கு மாறிடணும்னு தென்னை போட்டேன்.

எனக்கு இருந்த 7 ஏக்கர் வண்டல் நிலத்துல 2 ஏக்கரை வித்துத்தான் பொண்ணுங்களை கட்டி கொடுத்தேன். இப்ப 5 ஏக்கர் வண்டல் நிலம், 8 ஏக்கர் களிமண் நிலம் இருக்கு. இருக்கற வண்டல் நிலத்துல தென்னைப் பயிர் வெச்சிருக்கேன். களிமண் நிலத்துல எப்பவுமே மக்காச்சோளம்தான். தண்ணி இல்லாம நிறைய நாளு தென்னை வாட எம்மனசே வாடிரும். வருஷத்துக்கு இரண்டு போகம் விவசாயம் பண்றதுக்கு, ஒன்றரை லட்சம் செலவு பண்ணுவேன் ஆனால் கைக்கு ரெண்டு லட்சம் வர்றதுக்குள்ள உன்னப்பிடி, என்னப்பிடின்னு ஆகிடும்.

அந்த நேரத்துலதான் என்னோட இரண்டாவது பொண்ணைக் கட்டின மாப்பிள்ளை சரவணன்,

‘ஈஷா விவசாய இயக்கம் மூலமா இயற்கை விவசாயம் பயிற்சி தர்றாங்க மாமா… நீங்களும் முதல் வெச்சு லாபம் பார்க்க முடியலை… செலவு கட்டலன்னு சொல்லறீங்க, நாம அந்தப் பயிற்சிக்கு போவோம்’னு சொன்னாரு.

ஈஷாவின் நஞ்சில்லா உணவு உற்பத்தி

blog_alternate_img

அவரு சொன்னவுடனே ரொம்ப கோபம் வந்துருச்சுங்க. காடு, கன்னு – தோட்டம், தொறவ யாரு பார்க்கறது... 9 நாட்கள் இதெல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் பயிற்சிக்கு வந்தா மட்டும் என்னத்த பெரிசா மாறிடப் போகுது? முதலுக்கே மோசம் வைச்சிருவீங்க போல... உங்க இஷ்டத்துக்கு நீங்க நினைச்சதெல்லாம் பண்ணறதை நிப்பாட்டுங்கன்னு கண்டிஷனா சத்தம் போட்டுட்டேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு இருந்த அவரு,

‘நாப்பது வருஷமா இதே பூச்சிமருந்து, ரசாயன உரம், விஷமான பயிரைத்தானே மாமா சாப்பிட்டுட்டு வர்றோம். நஞ்சில்லாத உணவு உற்பத்தி பண்ண முடியும்னு ஈஷா விவசாயம் இயக்கம் சொல்றாங்க. குறைஞ்ச முதலீட்டில நிச்சயம் லாபம் பார்க்க முடியும் அப்படின்னும் சொல்றாங்க மாமா. சுபாஷ் பாலேக்கருன்னு பெரிய ஆளு அவரு… இயற்கை விவசாயத்துலேயே சிறப்பா நம்ம நிலத்தை நஞ்சில்லாம மாத்தி லாபம் பார்க்கறது எப்படின்னு சொல்லித் தர்றாரு…நான் உங்களுக்கும் எனக்கும் சேர்த்து பயிற்சிக்குப் பேர் கொடுத்துப்புட்டேன் நீங்க வந்துதான் ஆகணும்’னு ஒத்தக் கால்ல நின்னுட்டாப்புல.

அவரு இன்ஜினீயர் படிச்சவரு. தறிவெச்சு தொழில் பண்றாரு. ஆனால், விவசாயத்து மேல ரொம்ப ஆர்வம். குழந்தைங்க நல்ல மாட்டு பால் குடிக்கணும். நல்ல சாப்பாடு சாப்பிடணும் மாமான்னு சொல்லுவாரு. அவரு சொல்லித்தான் பேரப்புள்ளைங்க மாட்டுப்பாலு குடிக்கணும்னு நாட்டுமாடு - கறவைமாடு இரண்டு வாங்கியிருந்தேன். அந்தப் பாலு குடிக்கறதே தெம்பா இருக்கற மாதிரி இருக்குது. அவரும் இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம்தான் செய்யப் போறேன்னு சொல்லிட்டு இருக்காரு.

சரி. நல்லதுதானே சொல்றாரு போய்த்தான் பார்ப்போம்னு தோணுச்சு. ஆனால், உள்ளுக்குள்ள அச்சம்தான். வெளில காட்டிக்காம பயிற்சிக்குப் போய்ட்டேங்க. போனப்புறம்தான் தெரிஞ்சுது இரண்டாயிரம் பேருக்கு மேல தமிழ்நாட்டோட மூலைமுடுக்கில இருந்தெல்லாம் பயிற்சிக்கு வந்திருந்தாங்க.

பாலேக்கர் ஐயா, இயற்கை உரம், ஜீவாம்ருத கரைசல், இயற்கை பூச்சிவிரட்டி தெளிப்பான், சொட்டுநீர் பாசனம், தென்னைக்கு வட்டப்பாத்தின்னு பொறுமையா எங்களுக்குப் புரியறமாதிரி நிறைய சொல்லித்தந்தாரு. நீங்க இந்த மாட்டு சாணம், மூத்திரம், நாட்டுச்சர்க்கரை பயிர் கலந்த ஜீவாம்ருதம் உபயோகப்படுத்தி பாருங்க. ஒரு கிராம் மாட்டு சாணத்துல முந்நூறுலேர்ந்து – ஐநூறு கோடி உயிரணுக்கள் இருக்கு. அதுவே உங்க நிலத்துல பல்கி, பெருகி நிலத்தோட மலட்டு தன்மையை நீக்கிடும். நேத்து சமஞ்ச பொண்ணுமாதிரி நிலம் பொலபொலன்னு மாறிடும்னு சொன்னாருங்க.

ஆறே மாதத்தில் பலன்

பயிற்சி முடிஞ்சு வந்துட்டேன். நம்பியும் நம்பாமலும்தான் அந்தக் கரைசலைத் தயாரிச்சேன். தென்னைக்குத்தான் முதல்ல தெளிச்சேன். ஆறே மாசத்துல நிலம் இறுக்கம் எல்லாம் தளர்ந்து அவரு சொன்னமாதிரியே பொல பொலன்னு ஆயிருச்சு. மண்புழு மேல வர்ற ஆரம்பிச்சதும் நம்பிக்கை வந்துடுச்சு. அவ்வளவுதான், எல்லா பூச்சி மருந்தையும் மூட்டைகட்டி தூக்கி எறிஞ்சிட்டேன்.

blog_alternate_img

அறுபது சென்ட் நிலத்துல பூராவும் கத்திரி போட்டேன். தென்னைக்கு நடுவ ஊடுபயிரா, கொத்தவரங்கா, பறங்கி, கீரை போட்டேன். எல்லாத்துக்கும் சொட்டுநீர் பாசனம்தான். கத்திரிக்கு அடிக்க, அக்னி அஸ்திரம்னு ஓர் இயற்கை பூச்சி விரட்டி. பூண்டு, மிளகாய், மாட்டு மூத்திரம், வேம்பழம் இதெல்லாம் போட்டு தயாரிச்சு அடிச்சேன். அதுமட்டுமில்லாமல், மாட்டு மூத்திரத்துல சாம்பல் கலந்து ஒரு புதுமருந்தை நானே கண்டுபிடிச்சி தெளிச்சேன் பாருங்க, கத்திரிக்காய் எல்லாம் தளதளன்னு அப்படி ஒரு காக்காய்ப்பு.

60 சென்ட்ல பொதுவா இப்படி பயிர் போட்டா நாளொன்னுக்கு நாலாயிரம் பார்ப்போம். ஆனால், அந்த காய் வர்றதுக்கு ஆயிரம் ரூபாய் பூச்சி மருந்துக்கே செலவு பண்ணிடுவோம். ஆனால், எந்த செலவு இல்லாம, பெரிய பூவா பூத்து காச்ச கத்திரியை ஏழாயிரம் வரைக்கும் சந்தைல ஒருநாளைக்கு விக்க முடிஞ்சுது.

அதிகரித்த லாபம்

blog_alternate_img

ரொம்ப குறைவான முதலீட்டில, இடுபொருள் செலவு ரொம்ப குறைச்சு நல்ல லாபம் பார்க்க முடிஞ்சுது. புரியறமாதிரி சொல்லணும்னா, ஒன்றரை லட்சம் செலவு செஞ்சு ரெண்டு லட்சம் லாபம் பார்த்த இடத்துல வெறும் எழுபது ஆயிரம் செலவு பண்ணி மூணு லட்சம் லாபம் பார்த்தோம். ஊடு பயிர்ல கிடைச்ச லாபம் கூடுதல் போனஸ்னா பார்த்துக்குங்களே” என்று தான் இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதையையும், அதில் பலமடங்கு லாபம் பார்த்த கதையையும், அதற்கு ஈஷா விவசாய இயக்கம் எவ்வாறு உறுதுணையாக இருந்தது என்பதையும் நம்மிடம் விரிவாக விவரித்தார் குமாரசாமி.

இதற்கு முன்பு ரசாயன உரம், பூச்சிமருந்து தெளிப்பு என்று இருந்தபோது, நிலத்தில் பாடுபடவேண்டிய நேரம் அதிகமாக இருக்கும் என்றும், அதன் ரசாயன நெடி மூக்கில் ஏறி மூச்சுத்திணறலில்கூட தவித்திருப்பதாகவும் குமாரசாமி கூறினார். மேலும், ரசாயனங்கள் கையில்பட எரிச்சல், சரும பிரச்சினைகள் எனப் பல்வேறு உடல் சிக்கல்களை சந்தித்த அவர், இன்று குறைவான நேரம், குறைவான முதலீடு, அதிக மகசூலில் ஆரோக்கியமான வாழ்வு, நஞ்சில்லா உணவு என வாழ்க்கை அழகாக நகர்கிறது என்று கூறும்போதே அவரது முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை படர்கிறது.

இன்று விவசாயத்துக்கு மானியம் அளிப்பது, விவசாயிகளுக்கான வாழ்வாதாரங்களை நிலைநிறுத்துவதன் மூலம் அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இவை எதுவும் இல்லாமலேயே தனது வருமானத்தை நான்கு மடங்காக உயர்த்தி சிகரம் தொட்டிருக்கிறார் குமாரசாமி.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள் கண்ட கனவை மனதிலேந்தி கடைகோடி கிராமத்துக்கும் நஞ்சில்லா விவசாயத்தைக் கொண்டு சேர்ப்பதில் முன்னோடி பாத்திரத்தை ஈஷா விவசாய இயக்கம் வகிக்கிறது. அதன் ஒரு பானை சோறுதான் குமாரசாமி. இன்னும் பல பருக்கைகளுடன் இனிவரும் வாரங்களிலும் உங்களைச் சந்திக்க வருகிறார்கள் குறைவான முதலீட்டில் நிரம்ப லாபம் பார்த்த நம்ம ஊரு விவசாயிகள்.

1 Comment
Hide Comments
to join the conversation
Keerthana V
19 December, 2020
வாழ்த்துக்கள் அண்ணா
Keep in touch
Get the latest updates on blog and happenings at Project Greenhands and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
Thank you for subscription.