loader
Back to Conscious Planet Homepage

கிராமப்புற பெண்களின் உறுதியை பறைசாற்றும் 5 நிகழ்வுகள்!

Field Stories
08 June, 2020
9:13 PM

ஈஷா தன்னார்வலர்களுக்கு உதவுவதில் ஒரு பெரிய உறுதுணையை அளித்துவரும் பல கிராமப்புற பெண்கள் தங்கள் சொந்த சமூகங்களின் மக்களை பலப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளைச் செய்கிறார்கள். கனிவு, உறுதி மற்றும் மீண்டு எழும்தன்மை ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு, வைரஸை வெல்வதற்காக சமூகத்தின் முதுகெலும்பாக துணைநிற்கின்றனர்.

blog-image-30_1

எப்போதும் சமூகங்களின் இதயமாக இருந்துவரும் கிராமப்புற பெண்கள், தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பை மட்டுமல்லாமல், தங்களின் குழந்தைகளுக்கும் பொறுப்பேற்று, கல்வியையும் ஒழுக்கத்தையும் வீட்டில் புகட்டுகிறார்கள். விவசாய குடும்பங்களில் விவசாயப் பணிகளிலும் அவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் நம் பகுதிகளில் நுழைந்த நிலையில், அவர்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக துணைநிற்கின்றனர். இந்த பெண்களின் அனுபவங்கள் பெரிதாக வெளிவராத நிலையில், இந்த கடினமான காலங்களில் ஒற்றுமையின் உண்மையான உணர்வைக் காட்டும் பெண்களின் 5 உத்வேகம் தரும் கதைகள் இங்கே.

1. பெண் சக்தியின் மகத்துவம்

நமது களப்பணி குழுவிற்கு தன்னார்வத்தொண்டு செய்வதற்கு முன்வந்த அதேவேளையில், தனது படிப்பிற்கான நேரத்தையும் ஒதுக்கி சமன்செய்து வருகிறார் பவன்யா. தனது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான அவரது ஆர்வமே அதில் முதன்மையாகத் தெரிகிறது. #BeatTheVirus இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அவர் ஒருங்கிணைந்த அங்கமாக செயல்பட்டுவருகிறார். ஆனால், அவருடைய செயல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர் இப்போது தனது தையல் திறமையைக் கொண்டு உதவுவதற்கு முன்வந்துள்ளார். “நான் பாதுகாப்பு முக கவசங்களை தைத்து எங்கள் கிராம மக்களுக்கு வழங்க விரும்புகிறேன். எனக்கு சானிட்டைசர்கள் கிடைத்தால், அதையும் நான் விநியோகிப்பேன்” என்று அவர் கூறுகிறார்.

2. தடைகளைத் தாண்டி முன்நிற்கும் பெண்மணிகள்

blog_alternate_img

பரமேஸ்வரன் பாளையத்தில், நஞ்சம்மா என்ற வயதான பெண் ஆறு குழந்தைகளுக்கு தாயாவார். ஊரடங்கிற்கு முன்பு, அவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ஒரு இட்லி கடையை நடத்தினார். இந்த நெருக்கடி காலத்திலும் கூட அவரது முயற்சிகள் நின்றுவிடவில்லை. அவர் தொடர்ந்து போராடி உழைத்து தனது குடும்பத்திற்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறார். தனது வயது முதிர்ந்த காலத்திலும், நஞ்சம்மா தனது குடும்பத்தை காப்பதற்காக அனைத்து தடைகளையும் தகர்த்துவிட்ட ஒரு பெண்ணாக விளங்குகிறார். இவரைப் போலவே கோயம்புத்தூரின் மற்றொரு கிராமத்தில் மூன்று குழந்தைகளின் தாயான கமலா தனது குடும்பத்தை காத்துவருவதைப் பார்க்க முடிகிறது. அவரது கணவர் மாற்றுத் திறனாளி, அவரால் வேலை செய்ய இயலாது என்பதால், கமலாம்மா தனது வீட்டுப் பொறுப்புகளின் சுமையைச் சுமக்கிறார். இந்த சிக்கலான தருணத்திலும் துணிந்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை ஒற்றை ஆளாக நின்று கவனித்து வருகிறார். கமலாம்மா கூறும்போது: “ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நாங்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டோம். ஆனால், இப்போது ஈஷாவின் உதவியுடன், நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம்” என்றார்.

3. நன்றியின் வெளிப்பாடு

நமது தன்னார்வத் தொண்டர்கள் வேடப்பட்டி பஞ்சாயத்தில் அன்பின் இனிமையை உணர்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். உள்ளூர்வாசியான தெய்வாம்பாள், நமது ஈஷா தன்னார்வலர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் குளிர் பானங்களை வழங்குவதன் மூலம் தனது அக்கறையையும் நன்றியையும் வெளிப்படுத்தினார். அவர் சொன்னார், "நீங்க எல்லாரும் கடுமையான வெயில்ல வேலை செய்றீங்க, தயவுசெஞ்சு ஓய்வு எடுத்து கொஞ்சம் ஜூஸ் குடிங்க." இதேபோல் மத்வராயபுரம் பஞ்சாயத்தில் வசிக்கும் இன்னொரு பெண் நமது தன்னார்வலர் ஒருவருக்கு குளிர்ச்சிமிக்க விளாம்பழத்தை கொடுத்து, நாவறட்சியை தணித்துக் கொள்ளும்படி கூறினார்.

4. நெருக்கடி காலத்தில் நெகிழ்ச்சிமிக்க தன்னார்வலர்கள்

blog_alternate_img

தீத்திபாளையத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் கோகிலா ஆகிய இரு பெண்கள் நமது ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். சுவரொட்டிகளை ஒட்டுவது, துண்டு பிரசுரங்களை வழங்குவது மற்றும் உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பதில் தன்னார்வலர்களுக்கு உதவுவது என கரங்கள் தேவைப்படும்போதெல்லாம் இருவரும் எப்போதும் உடனிருக்கிறார்கள். ஈஷா தன்னார்வலர்களின் கூற்றுப்படி, இந்த பெண்கள் தங்கள் சமூக மக்களுக்காக தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்குகின்றனர்.

5. இதயப்பூர்வமான நன்கொடைகள்

இந்த நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு, தீத்திபாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த நளாயினி என்ற பெண், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்காக 30 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கினார். தேவராயபுரத்தில், டஜன் கணக்கான பெண்கள் நமது தன்னார்வத் தொண்டர்களிடம் வந்து தினசரி செயல்பாடுகளில் தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் தங்கள் சமூக உணர்வை வெளிப்படுத்தினர். இதே போன்ற பரந்த மனப்பான்மை அருகிலுள்ள கிராமங்களிலும் எதிரொலிக்கிறது. நமது தன்னார்வத் தொண்டர்கள் கவனிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், உள்ளூர்வாசிகளில் பெரும்பாலானோர் நமது குழுவுக்கு பல்வேறு வழிகளில் உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் அனைத்திலும் பெண்கள் நெருக்கடி காலத்தில் உறுதியாகவும் கருணை உணர்வுடனும் இருப்பதன் அர்த்தத்தை நிரூபித்துள்ளனர். உலகளாவிய தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புற பெண்கள் தங்கள் சமூகங்களின் நலனில் முக்கிய பங்களிப்பை வகிக்கின்றனர்.

Tags
No Comments
to join the conversation

Related Stories

Keep In Touch
Get the latest updates on blog and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
Thank you for subscription.